நியூயார்க்:
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
கால்பந்து விளையாட்டில் மாபெரும் திருவிழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்பந்து சம்மேளனம்) நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் போட்டிகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகக் கருதப்படுகிறது.
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெற உள்ளன.
குரூப் சுற்றின் முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் மற்றும் குரூப் வாரியாக 3-ம் இடம் பெறும் 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்பின்னர் கால், அரை, இறுதிச் சுற்றுப் போட்டிகள் அரங்கேறும்.
104 ஆட்டங்கள்
மொத்தம் 104 ஆட்டம், 16 நகரங்களில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ள மைதானங்களில் விளையாடப்படவுள்ளன. இறுதிப் போட்டி, ஈஸ்ட் ருதர்ஃபோர்டில் அமைந்துள்ள ‘மெட்லைஃப் ஸ்டேடியத்தில்’ நடைபெறும். இத்தொடர் 16 வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 16 மைதானங்களில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள 11 மைதானங்களில் ஒன்றான, நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ருதர்ஃபோர்டில் அமைந்துள்ள மெட்லைஃப் மைதானம் 82,500 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது.
கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் அமைந்துள்ள சோஃபி மைதானத்தில் 70,240 பேரும், டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்தில் 80,000 பேரும், டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் 72,220 பேரும், மிசவுரியின் கன்சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்தில் 76,416 பேரும், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் 71,000 பேரும் ஃபுளோரிடாவின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் 64,767 பேரும், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் 68,500 பேரும் பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் உள்ள லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் மைதானத்தில் 69,796 பேரும் வாஷிங்டனின் சியாட்டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்தில் 68,740 பேரும், மாசாசூசெட்ஸின் ஃபாக்ஸ்பரோவில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் 65,878 பேரும் போட்டியை ரசிக்கலாம்.
கனடா நாட்டில் 2 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் அமைந்துள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் 54,500 பேரும், டொராண்டோவில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்தில் 45,736 பேரும் அமர்ந்து போட்டியைக் கண்டுகளிக்கலாம். மெக்ஸிகோவில், எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்திலும், (87,523 இருக்கைகள்), குவாடலஜாராவில் உள்ள எஸ்டாடியோ அக்ரான் மைதானத்திலும் (49,850 இருக்கைகள்), மான்டோரியில் உள்ள எஸ்டாடியா பிபிவிஏ மைதானத்திலும் (53,500 இருக்கைகள்) போட்டிகள் நடைபெறும்.
குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்
குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு
குரூப் ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து
குரூப் ‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து
குரூப் ‘டி’: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி
குரூப் ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார்
குரூப் ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா
குரூப் ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து
குரூப் ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே
குரூப் ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே
குரூப் ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
குரூப் ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா
குரூப் ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா