கோவை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்.பி. வேலுமணி, தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார்.
தொண்டாமுத்தூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வழக்கமான அதிமுக நிகழ்ச்சிகளைப் போல கட்சி கொடிகள், பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் போஸ்டர்களின்றி மிகவும் எளிமையாக நடைபெற்றது. மண்டபத்தின் வெளிப்புறத்திலும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியிலும் கட்சிக் கொடிகளோ, எஸ்.பி. வேலுமணியின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்களோ வைக்கப்படவில்லை. அதே நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்தது.
மேலும், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செம்மை வேலுச்சாமி இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "தேர்தல் நேரத்தில் இரவு பகலாக உழைத்த கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் இணைந்து உணவு அருந்தவும் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது," என்றார்.
அதிமுக நிகழ்ச்சி ஏன் பேனர்கள், கொடிகள் இன்றி எளிமையாக நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிகழ்ச்சியில் எந்தவித குறையும் இல்லை. மண்டபத்திற்குள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன," என்று விளக்கம் அளித்தார்.
மேலும், வரும் ஜூலை 2-ஆம் தேதி தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் செல்ல உள்ளதாகவும், அதற்கு முன்பாக தன்னை வெற்றி பெறச் செய்த நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தவே இந்தச் சந்திப்பை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நியமனப் பதவிகளை வழங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.