கோவையில் 19வயது மாணவி அனு கீர்த்தனா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உடல் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டம் செய்ய கொண்டு வரப்பட்டது அங்கு திமுக மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தி மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி ஜெயக்குமார் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசின் போது இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
பாஜக அரசு இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு மாணவியை பலி வாங்கி உள்ளது என்றும் இதனை பாஜகவின் தொடர் கொலைகள் என்று தான் கூற வேண்டும் என குறிப்பிட்டார்.
அனிதா மரணத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் மேற்கொண்டார் ஆனால் பாஜக அரசு செவி சாய்க்கவே இல்லை என்றும் பூஜ்ஜியம் எடுத்தாலும் மருத்துவர் ஆகலாம் என்றால் இது தரமான மருத்துவர் களுக்காக நடத்தப்படும் தேர்வா? அல்லது கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுக்குக்காகவா? என கேள்வி எழுப்பினார்.
சமச்சீர் கல்வியே தரமானதாக இருக்கும் பொழுது நீட்டிற்கு நுழைவு தேர்வு வைக்கிறார்கள் என்று கூறிய அவர் ஆரிய கூட்டம் நம்மை அடிமைப்படுத்தி வைத்ததைப் போலவே மீண்டும் மீண்டும் நம் குழந்தைகளை நீட் தேர்வு காவு வாங்குகிறது என விமர்சித்தார்.
உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது பற்றி வாய் திறக்காத தமிழக வெற்றிக்கழக அரசு சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பாஜக அரசை எதிர்த்து தமிழக வெற்றி கழக அரசு போராட வேண்டும் என்றும் அதற்கு திமுக தலைவரின் ஒத்துழைப்பும் இருக்கும் என்றார்.
பாஜக அரசு வணிக நோக்குடன் நீட் தேர்வை நடத்துகிறது இந்த முறையாவது இதனை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.