கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில், கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஆர்.ஹெச்.ஆர். ஹோட்டல் அரங்கில் ஒப்பந்ததாரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, ஒப்பந்தப்புள்ளி தொகை நிர்ணயம், பணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகி நாராயணன்,
ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் அந்தந்த உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்களாக உள்ளதாகவும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும்,
கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஒப்பந்தப்புள்ளி தொகைகள் உயர்த்தப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்படும் போது சந்தை விலையை விட குறைவான தொகையில் நிர்ணயம் செய்யப்படுவதால், பணிகளை முடிக்கும் நேரத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்து, ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களை அரசு சார்பில் வழங்கிய நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அந்த நடைமுறை இல்லாததால், ஒப்பந்ததாரர்களே பொருட்களை வாங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதனால் ஒப்பந்ததாரர்களின் முதலீடு அதிகரிப்பதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் டெண்டர் முறையால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், வெளியூர் ஒப்பந்ததாரர்களும் பணிகளில் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
எனவே, உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய டெண்டர் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பணிகள் முடிக்கப்பட்டு ஆடிட் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள், ஒப்பந்ததாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப ஒப்பந்தத் தொகையை மாற்றியமைத்து, ஒப்பந்ததாரர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்
உள்ளூர் பகுதிகளில் பணியாற்றும் ஒப்பந்ததாரர்கள் தரமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தரக்குறைவான பணிகள் நடைபெற்றால் அதற்கான விமர்சனங்களை உள்ளூர் மக்களிடமே எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால், தரத்தில் எந்த சமரசமும் செய்வதில்லை என்றும் சங்க நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.
டாஸ்மார்க் கடைகளில் பார்ட்டி ஃபண்ட் மாதிரி ஊராட்சி ஒன்றியங்களின் ஒப்பந்தங்களில் ஏதாவது கமிஷன் இடர்பாடு பற்றி செய்தியாளர் கேட்டதற்கு,
அப்படி எந்த கமிஷன் இடர்பாடுகளும் இல்லை என்று கூறினார்