மஞ்சளில் ஒரு லட்சம் கௌரி அம்மன் சிலைகள் செய்து வழிபட்ட பெண்கள்..

கோவை வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில்,விவசாயம் மற்றும் தொழில் செழிக்கவும், உலக மக்கள் நலன் மற்றும் உலக நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டி ஒரு லட்சம் கௌரி அம்மனின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ பிரக்ஞானந்த சரஸ்வதி பாலசுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

பூஜையின் ஒரு பகுதியாக சங்கல்பம், கௌரி அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமாவளி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மொத்தம் 1,00,008 கௌரி அம்மனை மஞ்சளில் செய்து பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

பூஜையின் போது வேத மந்திரங்கள் மற்றும் ஆன்மிக மந்திரங்கள் முழங்க, பெண்கள் அனைவரும் அவற்றைத் தொடர்ந்து உச்சரித்து கௌரி அம்மனை வழிபட்டனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக அதிர்வுகளுடன் பக்தி பரவசமாக காட்சியளித்தது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும், உலக நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும், விவசாயம் மற்றும் தொழில் செழிக்க வேண்டும், ஆண்டின் 365 நாட்களும் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், ஒவ்வொரு பெண்ணும் 366 கௌரி அம்மன் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

ஒரு கௌரி அம்மனுக்கு பூஜை செய்வதைவிட, 366 கௌரி அம்மன் சிலைகளுக்கு ஒரே நேரத்தில் பல பெண்கள் இணைந்து பூஜை செய்து, மொத்தமாக ஒரு லட்சத்து எட்டு கௌரி அம்மன் பூஜைகளை நிறைவேற்றுவது ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்ததாகவும், அதிக நன்மைகளை அளிப்பதாகவும் விழாவில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பெரியவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கௌரி அம்மன் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக அன்னதானமும் நடைபெற்றது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் ஒரு லட்சத்து எட்டு கௌரி அம்மன் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்