மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு இன்று வீரவசந்தராயர் மண்டப பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்த கடைகளில் 2018 பிப். 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்தது.
இந்நிலையில் அப்போதைய அரசு ரூபாய் 18.10 கோடியில் மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன
ஆனால், கொரோனா ஊரடங்கு, ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது.
தொடர்ந்து 2021-ம் ஆண்டு வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்கான புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூபாய் 38.30 கோடியில் மண்டபத்தை கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து 2026-ல் மண்டப சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு கடந்த ஜூன் 18-ம் தேதி இந்த மண்டபத்துக்கான 79 தூண்களையும் நிறுவும் பணி நிறைவுபெற்றது. பின்னர், மேற்கூரை உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டபப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தது
இந்நிலையில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக வீரவசந்தராயர் மண்டபத்தைத் திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில் இன்று காலை 9.00 மணி முதல் 9.15 மணிக்குள் வீரவசந்தராயர் மண்டப பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.கல்லாணை மற்றும் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி அவர்கள், அறங்காவலர் குழுத் தலைவர் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், திருக்கோயில் இணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான க.செல்லத்துரை, உள்ளிட்ட துறை அதிகாரிகள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அர்ச்சகர்கள். பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்