அரசு பேருந்தில் ஓட்டுநரின் அறிவுரை வீடியோ வைரல்...

.

கோவை

உக்கடம் பகுதியில் 21-ம் எண் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தில் பயணிக்கும் போது உணவுப் பொருட்களை சாப்பிட்டு, அதன் கழிவுகளை பேருந்துக்குள் வீச வேண்டாம் என ஓட்டுநர் கேட்டுக்கொண்டார். மேலும், நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு இந்தப் பேருந்து சாமி போன்றது என்றும், தாங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்பதால் பேருந்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல், மகளிர் மட்டும் பயணிக்கும் பேருந்து வருகிறது என தெரிந்தவுடன், சாலையில் ஓடி வந்து பேருந்தில் ஏற முயற்சிக்க வேண்டாம் என்றும் ஓட்டுநர் தெரிவித்தார். பேருந்தை திடீரென நிறுத்தினால், பின்னால் வரும் வாகனங்கள் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் சில நேரங்களில் பேருந்தை நிறுத்தாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும் என்றும் ஓட்டுநர் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பான பயணமே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து நடத்துநர்களிடம் *ஜிபே மூலம் பணம் செலுத்தும் வசதி* அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பயணிகளிடம் தெரிவித்தார்.

பயணிகளின் பாதுகாப்பு, பேருந்தின் தூய்மை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்து ஓட்டுநர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்