இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி....

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதற்காக முதலமைச்சர் மேட்டூர் வந்துள்ளதாகவும், அதற்கான பணியை அவர் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். முதலமைச்சரின் மேட்டூர் பயணம் குறித்து தனக்கு தற்போது முழுமையாக தெரியாது என்றும், தெரிந்த பிறகு அது குறித்து பேசுவதாகவும் கூறினார்.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும் என்றார். சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும், அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துவதாகவும், அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்த அவர், சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும் அதன்படி செயல்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், அதற்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார்.

தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்தார்.

தமிழகத்திற்கு ஏற்கனவே அதிக அளவில் கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதால் அதற்கேற்ப கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

மின்சாரத்துறையில் ஏற்கனவே 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மின் உற்பத்திக்காகவும், மின்பாதை அமைப்பதற்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அனல் மின் நிலையங்களை முழுமையாக அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்று தொடர்ச்சியான இலவச திட்டங்களை அறிவிக்கவில்லை என்றும், தேவையான ஒரு பகுதியை மட்டுமே அறிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தற்போதைய அரசு தொடர்ந்து செலவினங்களை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வருவதாகவும், அதனை சமாளிக்க தொடர் வருவாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

போக்குவரத்துத்துறையில் பழைய பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என அதிமுக ஆட்சிக்காலத்திலேயே வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் என இருந்ததை, நிதி பற்றாக்குறை காரணமாக 5 ஆண்டுகள் மற்றும் 7 லட்சம் கிலோமீட்டர் என மாற்றியதாக குற்றம்சாட்டினார். ஏற்கனவே ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை மீண்டும் இயக்கினால் எப்படி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த அரசு போக்குவரத்துத்துறையில் ஆயிரம் பேருந்துகள் வாங்கியதாக கூறியுள்ளதாகவும், மாநகரப் போக்குவரத்திற்காக வாங்கப்பட்ட மின்சார பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த ஆட்சியில் திட்டமிடாத செயல்பாடுகளே காணப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருவதாக தெரிவித்தார். சோதனை நடைபெற்ற இடங்களிலேயே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால், சோதனை நடைபெறாத இடங்களில் எவ்வளவு இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், தமிழகம் முழுவதும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

எல்லா ஆட்சிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்ததாகவும், தங்களது ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற சோதனைகளை வைத்து விளம்பரம் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போதைய ஆட்சியில் எங்காவது சோதனை நடைபெற்றால், அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு விளம்பரப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், “ரீல்ஸ் போட்டு வண்டி ஓட்டுகிறார்கள்; ரியல் ஏதும் இல்லை” என்றும் விமர்சித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மேட்டூர் அணையை திறந்து வைத்ததாகவும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே முறையை பின்பற்றியதாகவும் தெரிவித்தார். தற்போது முதலமைச்சர் தனி விமானத்தில் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் காஸ்ட்லி முதலமைச்சர்; நாங்கள் விவசாயி. எனது நிலை வேறு, அவரது நிலை வேறு” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

“அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றும், அது அவருடைய விருப்பம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு எதையும் செய்யலாம் என்றும், ஆனால் வடமாநிலங்களில் அது நடக்காது என்றும் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்தார். அந்த உறுப்பினர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டு வருவதாகவும், எனவே அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வதால் எதுவும் செயல்படாது என்றும் கூறினார்.

இந்திய கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதுகுறித்து பார்க்கலாம் என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு இன்னும் காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டதாகவும், அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது, அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர், வருவாயை பெருக்குவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, இவற்றை வைத்து பார்க்கும்போது இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது என்றார்.

அதிமுகவிற்குள் நிலவி வரும் சங்கடங்கள் தீர்க்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்