மொபைல் போன் ஆப் மூலம் நடைபெற்ற பண மோசடி :

யூ.எஸ் டாலர் மூலம் இரட்டிப்பு பணம் பெறலாம் என கூறப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு. சதுரங்கம் பட பாணியில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை..!!


மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோராக உள்ளனர். இந்நிலையில் பெருகி வரும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக எப்படியாவது குடும்ப தேவைகளுக்காக பணம் சம்பாதித்து விட மாட்டோமா என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதனைப் பயன்படுத்தி தற்போது மேலூர் பகுதிகளில் மொபைல் ஆப் மூலம் பலகோடி ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது. 

இதற்காக மேலூர் பகுதிகளான கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு, பணம் கொடுத்தவரின் மொபைலில் (FQL EXCHANGE) or (fqlin.com) or (V.G INVESTMENT) பதிவிறக்கம் செய்யப்படுகின்றது. தொடர்ந்து மொபைல் ஆப்பில் கேட்கப்பட்டுள்ள படி விபரங்கள் பகிர்ந்த பிறகு, அவர் செலுத்திய 50 ஆயிரம் பணத்திற்கு யூ.எஸ் டாலர் என்று கூறக்கூடிய 500 (BITCOIN) மற்றும் போனஸாக 20 காயின் சேர்த்து 520 காயினாக ஆஃப்பில் ஏஜென்ட் மூலம் செலுத்தப்படும். 

இதிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு புதிதாக சேர்ந்தவருக்கு சிக்னல் (விளையாட்டு போன்று) அனுப்படும் அதனை ஓகே செய்ய வேண்டும் அதற்கு 10 முதல் 20 காயின் வழங்கப்படும் என்றும், 45 நாட்களுக்கு பிறகு, கட்டிய ரூபாய் 50 ஆயிரம் பணத்தை இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம் என்று வழிமுறைகள் கூறப்படுகின்றது.

மேலும், தற்போது வரை இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர்  இலட்சங்கள் முதல் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து உள்ளனர் என்று ஆசை வார்த்தை கூறப்படும் நிலையில், அதனை நம்பி மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடை கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஏஜெண்டுகள் மூலம் செலுத்தி புதிய மோசடிக்கு வழி வகுத்துக் கொடுத்து காத்திருக்கின்றனர். 

தற்போது, இந்த ஆப் முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் இருப்பதால், இதில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் அறிவுறுத்தல் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் இந்த மோசடி குறித்தும், இதற்கு ஏஜண்டாக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தருமாறு கூறி மேலூர் அரசு கலைக் கல்லூரி முன்பாக ஒன்று கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செல்ல முயன்ற நிலையில், அங்கு வந்த மேலூர் காவல்துறையினர் இதுகுறித்து மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன் இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

சதுரங்கம் பட பாணியில் நடைபெற்றுள்ள இந்த மோசடியால் மேலூர் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கான மக்கள் பல இலட்சம் கோடி இழந்த பரிதவித்து வரும் இதுகுறித்து தமிழக அரசும், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் வேண்டுகோளாக உள்ளது

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்