பணம் கட்டி ஏமாந்த500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளான கல்லணை, வலசை, சின்ன ஊர்சேரி, பெரிய ஊர்சேரி, பாலமேடு , சரந்தாங்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்களிடம் மதுரையை சேர்ந்த FQL என்ற நிறுவனம் ரூ 50 ஆயிரம், 1 லட்சம், 2 லட்சம் என பணம் முதலீடு செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் இதில் ஆட்களை சேர்த்தால் அவர்களுக்கு தங்க நகைகள், பரிசு பொருட்கள் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை நம்பிய 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பணத்தை ஆன்லைன் மூலம் கட்டியதாக கூறப்படுகிறது.
இரண்டு மாதம் வட்டி வழங்கிய நிறுவனம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வரை வசூல் செய்து தற்போது கொடுத்த பணத்தை தராமல் நிறுவனத்தை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மதுரை மேலுரை சேர்ந்த நபர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்த நிலையில் மதுரை மாவட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என நேற்று அறிவித்தனர் இதனை தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இப்பகுதி மக்கள் அளித்த புகாரில் வலசை பகுதியை சேர்ந்த தம்பதியான வினோத் - துர்க்கா தம்பதி தான் இந்த பகுதியில் ஏஜெண்ட் போல் செயல்பட்டதால் அவர்களை நம்பி தான் பல லட்சம் பணத்தை கொடுத்ததாகவும்
முதலில் 50 ஆயிரம் , 54 ஆயிரம் , 1 லட்சத்து 20 ஆயிரம் என தொடர்ந்து பலர் பணம் கட்டி ஏமாந்துள்ளதாக கூறி அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், அலங்காநல்லூர் மதுரை பிரதான சாலையில் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மோசடி செய்த தம்பதியிடமிருந்து எங்களது பணத்தை பெற்று தருமாறு அலங்காநல்லூர் போலீசிடம் பொதுமக்கள் பெண்கள் பேசி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த சமயநல்லூர் DSP அரவிந்தன் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் தற்போது கலைந்து சென்றனர்.