கோவை
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: தொகுதி மறுவரைவு மசோதாவை வரவேற்க வேண்டும் – பழனி கோவில் நில விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிக்கை...
கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரைவு திருத்த மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக வரவேற்க வேண்டும் என்றார். அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட உள்ளதால், தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோவில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பழனி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.4 ஏக்கர், ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார். தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான மொத்த நிலங்கள் எவ்வளவு உள்ளன என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், கோவில் நில அபகரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது ஆபத்தான நடைமுறை என்றும், சாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கேட்டு பதிவு செய்வதை கைவிட வேண்டும் என்றும் கூறினார். சேகரிக்கப்படும் தகவல்கள் எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயமரியாதையை முன்னிறுத்தியே புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட்டதாக தெரிவித்த அவர், தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 60 நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்று விமர்சித்தார். ஊழல் ஒழிப்பை மேல்மட்டத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் துறையில் கூடுதல் கட்டண வசூல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டதாக கூறப்படும் வெள்ளை அறிக்கையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள், மாநில வருவாயை எவ்வாறு உயர்த்தப் போகிறார்கள் என்பது குறித்து மக்கள் பட்ஜெட்டில் எதிர்பார்த்து வருவதாக தெரிவித்தார்.
மதுக்கரை மரப்பாலம் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், கோவைக்கான கிழக்குப் புறவழிச் சாலைத் திட்டத்தை தற்போதைய அரசு கைவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகளும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இயற்கையாக ஏற்படும் இடைத்தேர்தல்கள் வேறு என்றும், ராஜினாமா மூலம் செயற்கையாக இடைத்தேர்தலை உருவாக்குவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.