விஜய் வருகைக்காக அமைக்கப்பட்ட பேரிகார்டுகள் ரூ4 கோடி செலவு - யாருடைய பணம் இது - திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் கேள்வி?
திமுக கட்டிய பெரியார் அறிவுலகம் - பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
அறிவுசார் உலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாநகரில் “ பெரியார் அறிவுலகம்” அமைத்து தந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,
மேற்கு மண்டல பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் வழிகாட்டுதலில் பேரில்,
கோவையின் பெருமைமிகு இந்த அடையாளத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு. துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசுவாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர். அ. ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர், தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்மு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பேசுகையில்
மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தொழிற் துறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது திமுக அரசு. அதன் மூலம் கொண்டு வரப்பட்ட திட்டம் நான் முதல்வன் திட்டம், அந்த திட்டங்கள் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கோவை காந்திபுரத்தில் திமுக அரசு ரூ 300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. ஏழு தளங்களை கொண்ட இந்த அறிவுலக நூலகத்தில் 3 தளங்களை மட்டுமே பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இதில் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ சிலைகள் அகற்றப்பட்டு அந்த பகுதியில் பூமி மற்றும் கோள்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், "நான் முதல்வன்" பொறிக்கப்பட்ட பிரமிடுகள் திரை போர்த்தி மூடப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்கு உரியது என கூறியவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு, முதல்வர் விஜய் மாலையணிவிக்கையில், எம்ஜிஆரின் கைகள் மறைக்கப்பட்டது. இதற்காக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றவர், இதற்கெல்லாம் மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றார். மேலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது அவர்கள் ஆட்சி என்பதை கூட மறந்து, தவெக உணவுத்துறை அமைச்சர், உணவு பொருட்களை பதுக்குகின்றனர் என்கிறார். அவற்றை தடுக்க வேண்டியது அவர்களது கடமை என்பது கூட அவர்களுக்கு தெரிய வில்லை என்றார்.
தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் பேசுகையில்;-
முதல்வர் விஜய் கோவை வந்துள்ளார். இதற்காக அவினாசி சாலையில் பேரி கார்டு அமைத்துள்ளனர். இதற்காக 4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இது யாருடைய பணம்? மக்களின் வரிப்பணத்தில் தேவையற்ற செலவு தேவைதான என கேள்வி எழுப்பியவர், மனிதனுக்கு மேல் தன்னை கடவுளாக விஜய் நினைத்துக் கொள்கிறார். தாராபுரம் இடைத்தேர்தலுக்கு வந்தபோதிலுமல, கோவையிலிருந்து, தாராபுரம் வரை பேரி கார்டுகள் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம் என குற்றம் சாட்டினார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.