கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், தெருவிளக்குகள், பூங்கா பராமரிப்பு மற்றும் சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி, திமுக மாநில தீர்மானக்குழு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த மனுவில், ஏற்கனவே நிர்வாக அனுமதி பெற்று, ஒப்பந்தப் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பணிகளுக்கான மதிப்பீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகராட்சியில் ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் தொடர்ந்து மக்களைச் சந்திப்பதில்லை என்றும், இதனால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் விமர்சித்தார். தொகுதியில் சாலைப் பள்ளங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, தொகுதியில் மதுபான விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ விவகாரத்தில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், வட்டக்கழகப் பொறுப்பாளர் டவுன் பா. ஆனந்த், என்.கேசவன்ex.mc., கழக நிர்வாகிகள் சு.தனபால், சி. டி. சி. நடராஜ், பாலச்சந்திரன், அருண், சுந்தர்ராஜ் உடனிருந்தனர்.