8 மணி நேர அறுவை சிகிச்சையில் கை மீண்டும் இணைப்பு – அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

 

பொள்ளாச்சி அருகே இடப்பிரச்னையில் கவுன்சிலர் கணவரின் கை துண்டிப்பு
அரிவாளால் வெட்டியவர் கைது; 8 மணி நேர அறுவை சிகிச்சையில் கை மீண்டும் இணைப்பு – அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

 

பொள்ளாச்சி அருகே ஓடையகுளம் பேரூராட்சியில் இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் திமுக கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டியதில், அவரது வலது கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை ஆனைமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடையகுளம் பேரூராட்சியின் 13-வது வார்டு கவுன்சிலராக விஜயவாணி உள்ளார். அவரது கணவர் முருகன் திமுக நிர்வாகியாக உள்ளார். முருகனுக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ஆறுச்சாமிக்கும் இடம் தொடர்பாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஓடையகுளம் பேரூராட்சி அலுவலகம் அருகே முருகனும் ஆறுச்சாமியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதில் ஆத்திரமடைந்த ஆறுச்சாமி தான் வைத்திருந்த அரிவாளால் முருகனின் வலது கையை வெட்டியதாக தெரிகிறது. இதில் அவரது கை முழுமையாக துண்டானது.

முருகனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

8 மணி நேர போராட்டத்தில் கை இணைப்பு

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், துண்டான கையை மீண்டும் இணைக்கும் வகையில் சுமார் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை  டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். . மருத்துவர்களின் தொடர் முயற்சியால் முருகனின் துண்டான கை மீண்டும் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் செல்வக்குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று முருகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்டவருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், துண்டான கையை சுமார் 8 மணி நேரம் போராடி மருத்துவர்கள் மீண்டும் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கும், தமிழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை?

இதனிடையே, பாதிக்கப்பட்டவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஆறுச்சாமி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சாதிச் சான்றிதழ்கள் பெறப்பட்ட பின்னர், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செல்வக்குமார் கூறினார். மேலும், தகுந்த ஆவணங்கள் கிடைத்தவுடன் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன், பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்பிலான நிவாரண உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சிகிச்சை தொடர்பாக ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் அண்ணாமலை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு தொடர்ந்து கேட்டறிந்ததாகவும் செல்வக்குமார் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட முருகன் அரசு மருத்துவர்கள் தனக்கு தரமான சிகிச்சை அளித்துள்ளதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்னை தொடர்பான தகராறில் திமுக நிர்வாகியின் கை அரிவாளால் வெட்டப்பட்டு துண்டான சம்பவம் பொள்ளாச்சி–ஆனைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்