தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதன்மைச் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. தங்களுடைய இடதுசாரி கொள்கைகளை முன்வைப்பதற்காக அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் திமுக தரப்பில் தவெக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் விமர்சனமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. கம்யூனிஸ்ட்டுகள் தங்களுடைய கொள்கையை தனியாக முன்னிறுத்துவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
தவெகவைப் பொறுத்தவரை, மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆட்சியை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களித்த அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள், அதுவும் முன்பு அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலையில் இருந்த இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து கவிழ்த்து ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக தவெக கருதுகிறது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டிய கடமை தளபதி விஜய்க்கும், தவெகவுக்கும் உள்ளது. அந்த அடிப்படையில்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் கட்சி மாறிவிட்டதாக ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் எதற்காக பதவியை ராஜினாமா செய்தோம் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு எதிராக, எதிர்த்து போட்டியிட்டவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கலைக்க அதிமுக எடுத்த முடிவை ஏற்க முடியாததால் ராஜினாமா செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆட்சியை பாதுகாப்பதற்காகத்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
தேர்தல் களத்தில் தற்போது நடப்பவை சின்னச் சின்ன வெடிகளை கொளுத்துவது போன்றவை. இதைத் தாண்டி ஒரு பெரிய நிகழ்வு வரப்போகிறது. அதுதான் தமிழக முதலமைச்சர் விஜய்யின் வருகை. அவர் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். அதனால் இதுபோன்ற சிறிய விஷயங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
எனக்கு 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. 50 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நான் செல்லாத சிறை இல்லை; போராடாத போராட்டம் இல்லை.
நீண்ட கால பொதுவாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் மனசாட்சியுடன் கூறுகிறேன். ஊழலை ஒழிக்க இந்த அரசாங்கத்தால் மட்டுமே முடியும். திமுகவாலும், அதிமுகவாலும் ஊழலை ஒழிக்க முடியாது. எந்தக் கட்சியாலும் ஊழலை ஒழிக்க முடியாது.
அரசின் செயல்பாடுகளில் ஆயிரம் குறைகளைச் சொல்லலாம். காவல் நிலையத்தில் தாக்குதல் போன்ற பல்வேறு குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். ஆனால் சரிசெய்ய முடியாத குறைபாடு என்று ஒன்று இருந்தால், அது ஊழலை ஒழிக்க முடியாது என்பதுதான்.
தமிழக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் ‘நானும் ஊழல் செய்ய மாட்டேன்; யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன்’ என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆட்சியில் இருந்த காலத்தில் அதை உறுதியுடன் செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
மேகமலை விவகாரத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள மக்களின் இடம் கட்டாயம் பாதுகாக்கப்படும். அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டினப்பாக்கம் விவகாரத்தில், இந்த அரசு ஜனநாயக முறையில் செயல்படும் அரசு. பரந்தூர் விமான நிலையத்துக்காக மக்கள் பல ஆண்டுகளாக போராடியபோது, அவர்களது கோரிக்கைகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பட்டினப்பாக்கம் விவகாரத்தில் இதுபோன்ற எந்த காரணமும் அரசுக்கு கிடையாது. உண்மையிலேயே மக்கள் அந்தத் திட்டத்தை விரும்பவில்லை என்றால், மேலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் மக்கள் விரும்பும் நிலைப்பாட்டையே அரசு எடுக்கும்.
மக்களுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு காரியத்தையும் தவெக அரசு செய்யாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.