கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதியை குறைத்ததை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களின் கல்விக்கான நிதியை குறைத்து மாமன் சீர் உள்ளிட்ட செலவுகளை செய்வதா என கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறும் போது, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாபெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் 17.7 சதவீதமாக இருந்த கல்வி நிதி ஒதுக்கீடு, நடப்பு பட்ஜெட்டில் 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டின் சதவீத கணக்கீட்டின்படி பார்த்தால், தற்போதைய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.71,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.53,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வித் துறைக்குச் சேர வேண்டிய ரூ.18,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒதுக்கியதை விட இந்த ஆட்சியில் 8 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான முதலீடான கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டு, தேர்தலில் அளிக்கப்பட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊதாரித் திட்டங்களுக்கும் அந்தப் பணத்தை அரசு திருப்பிவிட்டுள்ளது. ஏழைக் குழந்தைகள் படிக்கும் கல்விக்கான நிதியைக் குறைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 20 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் ரூ.10,000 கோடி உயர்த்த வேண்டும். கல்விக்கான நிதியை உயர்த்தத் தவறினால், தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பேட்டி: ஈஸ்வரன் ( மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்)