கடந்த 2 மாதங்களில் ரூ.25 கோடி இழப்பு

மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

 

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்... 

அட்டைப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டன்னுக்கு சுமார் ரூ.8,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் அட்டைப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 

இந்த விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும்,

குறிப்பாக,அட்டைப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ரூ.25 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் கதிர்வேலு தெரிவித்தார்.

அட்டைப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளான காகிதத்தின் கொள்முதல் வரி 18 சதவீதமாக உள்ளது. ஆனால், அட்டைப்பெட்டிகளின் விற்பனை வரி 5 சதவீதமாக மட்டுமே இருப்பதால், மீதமுள்ள 13 சதவீத வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதைக் கருத்தில் கொண்டு, 13 சதவீத உள்ளீட்டு வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி முதல் அட்டைப்பெட்டிகளின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும், உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில்துறையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, அட்டைப்பெட்டிகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விலை உயர்வை வாடிக்கையாளர்களிடம் முழுமையாகக் கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், தொழில் நிறுவனங்களின் நிதிநிலையும் பாதிக்கப்படுகிறது.

மேலும், அட்டைப்பெட்டிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் காலம் 30 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதால், உற்பத்தியாளர்களின் பணப்புழக்கம் பாதிக்கப்படுகிறது. 

மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும், தொழிற்சாலைகளைத் தொடர்ந்து இயக்குவதற்கும் அதிக நிதி தேவைப்படும் நிலையில், விற்பனைத் தொகை உரிய காலத்தில் கிடைக்காதது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், வரி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு, சிறு மற்றும் குறு அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், அட்டைப்பெட்டி உற்பத்தித் துறையில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அரசு விரைந்து தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்

Feed not found.