நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்ணணி சார்பில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். கோவை கோட்ட பொதுசெயலாளர் பாபா கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்டக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்குத் தடை எதுவும் விதிக்கப்படாத நிலையிலும், அரசு அதனைச் செயல்படுத்தாமல் தாமதிப்பது கண்டிக்கத்தக்கது.
சின்னச், சின்னக் கோயில்களை இடிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுகளை மிகத் தீவிரமாகச் செயல்படுத்தும் அதிகாரிகள், ஆன்மிகம் சார்ந்த இந்த விஷயத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிராக ஓரவஞ்சனையாகச் செயல்படுகின்றனர்.
முந்தைய தி.மு.க அரசைப் போலவே தற்போதைய த.வெ.க (TVK) அரசும் இந்துக்களுக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அரசு இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் படையப்பா எ முத்துக்குமார் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், முருகானந்தம், ஜெய்கார்த்திக், செல்வம், ஆனந்தன், அசோக், மனோகர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.