எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்க கோவை வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை புறப்படுவதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் விமான நிலைய வளாகம் முன்பு திரண்டிருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாகவே தொண்டர்கள் உற்சாக கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
“காசுக்கு விலை போக மாட்டோம்”, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி”, “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ளிட்ட முழக்கங்களை தொண்டர்கள் எழுப்பினர்.
தொடர்ந்து விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, குவிந்திருந்த தொண்டர்கள் ஆரவார வரவேற்பு அளித்து, ஆதரவு முழக்கங்களுடன் அவரை சென்னை நோக்கி வழியனுப்பினர்.