“பால் நிறுத்தப் போராட்டம்!” “தமிழ்நாட்டில் பரபரப்பு!”

பசும்பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தித் தருவதாகக் கூறி தமிழக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறிய பால் விவசாயிகள், அரசு தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதம், சத்தியாகிரகப் போராட்டங்களை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், வரும் 24, 25ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பால் நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வோம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சங்கத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் மட்டும் விலை உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தது விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாலுக்கு விலையின்றி விவசாயிகள் கண்கலங்கி நிற்கிறோம்.

பசும்பாலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர், துறைச் செயலரிடம் மனு அளித்தோம். அப்போது குறைந்தபட்சம் 7 ரூபாய் விலை ஏற்றிக் கொடுக்கிறோம் என்று வாய்மொழியாகக் கூறினார்கள்.

ஆனால், இன்று அவர்கள் சொன்னபடி செய்யாதது பெரிய ஏமாற்றமாக உள்ளது. ஆவினுக்கு பால் கொடுத்து, மக்களுக்குப் பணியாற்றக்கூடிய விவசாயிகளை அரசு ஏமாற்றுகிறது.

எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், வரும் 24, 25ஆம் தேதிகளில் மிகப்பெரிய பால் நிறுத்தப் போராட்டம் நடத்துவோம். பசும்பாலுக்கு 10 ரூபாயும், எருமைப் பாலுக்கு 20 ரூபாயும் விலை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் சத்தியாகிரகப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்